பாகிஸ்தானின் தேசிய கொடி உட்பட, பாகிஸ்தான் சம்பத்தப்பட்ட பொருட்களை தங்களது தளத்தில் விற்பனை செய்து வந்த பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நோட்டீஸ் அனுப்பி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த இரண்டு பெரிய மின் வணிக தளங்கள் மட்டும் இன்றி Ubuy India, Etsy, The Flag Company மற்றும் The Flag போன்ற நிறுவனங்களுக்கும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி உத்தரவை பிறப்பித்துள்ளார். இது போன்ற ஆன்லைன் தளங்களில் பாகிஸ்தான் நாட்டு கொடிகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கடுமையாக கண்டித்து உள்ளார்.
அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள X பதிவில், "பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக amazonIN, Flipkart, UbuyIndia, Etsy, The Flag Company மற்றும் The Flag Corporation ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபோன்ற உணர்வின்மையை பொறுத்துக்கொள்ள முடியாது. மின்னணு வணிக தளங்கள் உடனடியாக இது போன்ற அனைத்து உள்ளடக்கங்களையும் அகற்றி தேசிய சட்டங்களை கடைபிடிக்க வேண்டும்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த வகையான சட்டம் மீறப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் குறிப்பிடவில்லை என்றாலும் பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சனைக்கு பிறகு இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
The CCPA has issued notices to @amazonIN, @Flipkart, @UbuyIndia, @Etsy, The Flag Company and The Flag Corporation over the sale of Pakistani flags and related merchandise. Such insensitivity will not be tolerated.
— Pralhad Joshi (@JoshiPralhad) May 14, 2025
E-commerce platforms are hereby directed to immediately remove all… pic.twitter.com/03Q4FOxwCX
இந்தியா - பாகிஸ்தான் போர்!
காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் கணிசமாக அதிகரித்தது. இந்த வன்முறைச் சம்பவம், இரு அண்டை நாடுகளுக்கு இடையே ஏற்கனவே உள்ள பகையை தீவிரப்படுத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இந்திய எல்லையில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனால் போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு இரு தரப்பினரும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும், எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் ஒப்புக்கொண்டனர். தற்போது போர் பதற்றம் குறைந்து இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பகுதியில் இருந்த மக்கள் சிலர் உயிரிழந்தும், சிலர் காயமும் அடைந்துள்ளனர்.