Tamil Nadu Government : விவசாய கூலிகளாக உள்ள பெண்கள் தமிழ்நாடு அரசின் ரூ.5 லட்சம் பெற விண்ணப்பிக்கலாம்
Tamil Nadu Government Agricultural Land Loan Scheme For Women : தமிழ்நாட்டில் நிலமற்ற விவசாய கூலிகளாகவே இருக்கும் பெண்கள் சொந்தமாக நிலம் வாங்க இப்போது விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான குட் நியூஸ் இப்போது வெளியாகியிருக்கிறது. இந்த வாய்ப்பை தகுதியுள்ள ஏழை, எளிய பெண்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பொன் திட்டங்களில் இதுவும் ஒன்று.
அதாவது, நிலமில்லாத பெண்கள் கூட்டுறவுத்துறை மூலம் விண்ணப்பித்து ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் தங்களின் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்ற கனவை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இப்போது இந்த அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட பெண்களுக்காக வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்துக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் "நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு கடன்" ரூ. 5.00 லட்சம் வரை கடன் கொடுக்கப்படும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விதிமுறைகள் உள்ளன. அதன்படி, எந்த கூட்டுறவு வங்கியில் விண்ணப்பிக்கிறீர்களோ அந்த கூட்டுறவுத்துறை வங்கியின் எல்லைக்குள் நீங்கள் வசிக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் இணை உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
21 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 55 வயதுக்குட்பட்ட ஏழை பெண் விவசாயத் தொழிலாளர்கள் இந்த கடன் பெற தகுதியானவர்கள். உங்கள் கடன் மதிப்பு அதாவது, CIBIL மதிப்பெண் 675க்கு மேல் இருக்க வேண்டும். சொத்தின் மதிப்பில் 65% வரை, அதிகபட்ச கடன் தொகையாக ரூ.5,00,000/-(2 ஏக்கர் வரை மட்டுமே) வழங்கப்படும்.
கடன் தொகைக்கான கடன் உறுதி ஆவணம் கடன் வாங்குபவரால் செயல்படுத்தப்பட வேண்டும். கடன் ஐந்தாண்டுகளுக்குள் திருப்பி செலுத்தப்பட வேண்டும். கடனுக்கான வட்டி விகிதம் 10%. வங்கிக் கடனில் வாங்கிய விவசாய நிலம் வங்கியின் பெயரில் அடமானம் வைக்கப்படும்.
கடன் வாங்கியவர் அசல் உரிமைப் பத்திரத்தை வங்கியில் ஒப்படைக்கவும், அடமான ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு புதிய வில்லங்க சான்றிதழை ஒப்படைக்கவும் வேண்டும். கடன் விண்ணப்பதாரர் வங்கியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உத்திரவாதம் அளிப்பவர்/ பிணையதாரரை அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் மனுதாரர் மற்றும் பிணையதாரரின் ஆதார், ஸ்மார்ட் மற்றும் பான் கார்டு நகல், மூல ஆவணங்களுடனான நில உடைமை ஆவணங்கள், கடந்த 13 வருடங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ், பட்டா/சிட்டா/அடங்கல், சொத்து வரி ரசீது, நிலத்தை வாங்குவதற்கான விற்பனை ஒப்பந்தம் பத்திரம் கொடுக்க வேண்டும்.
இதுதவிர, சொத்து உரிமையை நிரூபிப்பதற்கான வங்கியின் சட்ட ஆலோசகர் கருத்து, வங்கியின் மதிப்பீட்டாளரால் அளிக்கப்பட்ட சொத்தின் மதிப்பீடு. சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
அவ்வப்பொழுது வங்கியால் தேவையானதாக வரையறுக்கப்படும்/விதிக்கப்படும் மற்ற ஆவணங்கள்/ சான்றிதழ் இனங்கள் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட நிலம் பாசன வசதி கொண்ட நிலமாக இருக்க வேண்டும். வாங்கப்படும் நிலம் பயிர் சாகுபடி செய்ய தகுதியுடைய நிலமாக இருக்க வேண்டும்.
கடனை அடைக்கும் வரை விளைவிக்கப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வது கட்டாயம். இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் பெண் விவசாயத் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி கிளையினை அணுகி பயனடையுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மற்றவர்கள் உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலங்கள் அல்லது கூட்டுறவு வங்கிகளுக்கு நேரடியாக சென்று இந்த திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.