Ind vs Eng: இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் உஇந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களையும் அடித்து சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். இந்த நிலையில், ஒரே போட்டியில், 200 மற்றும் 100 ரன்கள் அடித்த 9 வீரர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
ஒரே டெஸ்ட் போட்டியில் 200 மற்றும் 100 ரன்கள் அடித்த முதல் வீரர் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டக் வால்டர்ஸ் தான். அவர் 1969ஆம் ஆண்டு சிட்னியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 242 மற்றூம் 103 ரன்களை அடித்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 1971ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 124 மற்றும் 220 ரன்கள் எடுத்தார்.
1972 ஆம் ஆண்டு கிங்ஸ்டனில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வீரர் லாரன்ஸ் ரோவ் இரட்டை சதம் (214) மற்றும் சதம் (100 நாட் அவுட்) அடித்தார்.
ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த இரண்டாவது ஆஸ்திரேலியர் என்ற பெருமையை கிரெக் சாப்பல் பெற்றார். 1974 ஆம் ஆண்டு வெலிங்டனில் நியூசிலாந்திற்கு எதிராக சேப்பல் ஆட்டமிழக்காமல் 247 ரன்களும், 133 ரன்களும் எடுத்தார்.
ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே இங்கிலாந்து வீரர் கிரஹாம் கூச் ஆவார். 1990 ஆம் ஆண்டு லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிராக 333 மற்றும் 123 ரன்கள் எடுத்தார்.
ஒரே டெஸ்ட் போட்டியில் 200+ மற்றும் 100+ ரன்கள் எடுத்த இரண்டாவது மேற்கிந்திய தீவுகள் வீரர் பிரையன் லாரா ஆவார். 2001 ஆம் ஆண்டு கொழும்பில் இலங்கைக்கு எதிராக 221 மற்றும் 130 ரன்கள் எடுத்தார்.
ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த முதல் இலங்கை வீரர் குமார் சங்கக்கார ஆவார். அவர் 2014ஆம் ஆண்டு சட்டோகிராமில் வங்கதேசத்திற்கு எதிராக 319 மற்றும் 105 ரன்கள் எடுத்தார்.
ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் இரட்டை சதம் அடித்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே ஆவார். அவர் 2022 ஆம் ஆண்டு பெர்த்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 204 மற்றும் 104 ரன்கள் எடுத்தார்.
சுனில் கவாஸ்கருக்குப் பிறகு ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுப்மான் கில் பெற்றார். பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 269 மற்றும் 161 ரன்கள் எடுத்தார்.