ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 10) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற 8வது லீக் போட்டியில், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மாஹே மெகலோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியினர், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். இதனால், ஊசுடு அணி முதல் 6 ஓவர்களில் 55 ரன்கள் குவித்தது. ராஜசேகர் ரெட்டி 20 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய கிருஷ்ணா பாண்டே 11வது ஓவரில், ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் கிடைத்தது. பின்னர், அவர் 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அட்டமிழந்தார்.
அட்டகாசமாக ஆடிய ஊசுடு அக்கார்ட் அணி வீரர் ஜஷ்வந்த் ஸ்ரீராம் 58 பந்துகளில் (8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) 92 ரன்கள் குவித்து வெளியேறினார். அதேபோல், இறுதிக் கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதின் பிரணவ் 18 பந்துகளில் (5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி) 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. மாஹே மெகலோ அணி தரப்பில் நித்தியானந்தா ராமன், திவாகர் கோபால் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மாஹே மெகலோ அணியினரும் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான கமலேஷ்வரன் மற்றும் அஜய் ரொஹேரா இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய வண்ணம் இருந்தனர். 4.2 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. அஜய் ரொஹேரா 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேலும், பவர்பிளே ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து அட்டகாசமாக ஆடிய கமலேஷ்வரன் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதற்கிடையில், ராகவன் ராமமூர்த்தி 16, ஸ்ரீகரன் ரன் ஏதும் இல்லாமலும் வெளியேறினர். பின்னர், கமலேஷ்வரன் 28 பந்துகளில் (6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இது குறித்து ஆட்டநாயகன் விருதுபெற்ற ஜஷ்வந்த் ஸ்ரீராம் கூறுகையில், "தோல்வி குறித்து பெரியளவில் யோசிக்காமல், அணியாக இணைந்து செயல்பட்டோம். சதத்தை தவறவிட்டது தனிப்பட்ட முறையில் வருத்தம் தான். பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கம், பி.பி.எல்2 மூலம் சரியான அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால், ஐபிஎல் வரை செல்லமுடியும்" என்றார்.
மேலும் படிங்க: IND vs ENG: லார்ட்ஸ் மைதானத்திற்குள் கவாஸ்கரை அனுமதிக்க மறுப்பா? நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ