Ajithkumar Lockup Death: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்து உள்ள மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த காவலாளி அஜித்குமார் (27) என்ற இளைஞரை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) கைது செய்துள்ளனர்.
Ajithkumar Lockup Death: அஜித்குமாருக்கு நடந்தது என்ன?
கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அவரது காரை பார்க்கிங் செய்யும்படி கூறி அஜித்குமாரிடம் சாவி கொடுத்ததாகவும், அதன்பின் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அந்த பக்தர் காரில் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 10 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பக்தர் காவல்துறையினரிடம் புகார் அளிக்க, காவல்துறை அஜித்குமாரை பிடித்து கடுமையாக விசாரித்துள்ளது.
போலீசாரின் விசாரணையின் போது அஜித்குமார் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. அஜித்குமார் கடந்த சனிக்கிழமை அன்று உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடலை உடற்கூராய்வு பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். அஜித்குமார் காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Ajithkumar Lockup Death: போலீசார் அளித்த விளக்கம் என்ன?
சமூக வலைதளங்களில் அஜித்குமார் உயிரிழப்புக்கு ஆளுங்கட்சி திமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. முக்கிய எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், நேற்றிரவுதான் அஜித்குமார் உயிரிழப்பு குறித்து போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், போலீசாரின் விசாரணையில் இருந்து அஜித்குமார் தப்பிக்க முயன்றபோது அவர் கீழே விழுந்ததில், அவருக்கு வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
உடனே அஜித்குமாரை சிவகங்கை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அழைத்து சென்றதாகவும். அங்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியதாகவும், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றதாகவும் (ஜூன் 28) இரவு சுமார் 11.15 மணிக்கு மருத்துவர் அவர்கள் பரிசோதித்து விட்டு அஜித்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 5 காவலர்களும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Ajithkumar Lockup Death: இபிஎஸ் கடும் விமர்சனம்
இந்நிலையில், காவல்துறையின் விளக்கத்தை கடுமையாக விமர்சித்து தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 1) காலை X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 1, 2025
மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக… pic.twitter.com/G69I2ytIMb
Ajithkumar Lockup Death: 'விக்னேஷ் மரணத்திற்கு சொன்ன அதே பொய்'
மேலும் அந்த பதிவில், ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும். இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை. "Deja Vu" எல்லாம் இல்லை - (சென்னை) விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது மு.க. ஸ்டாலின் எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.
நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் Justice For Ajithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர். நாடு முழுக்க #JusticeForAjithkumar, #NationWithAjith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் ஸ்டாலின் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்?.
Ajithkumar Lockup Death: இபிஎஸ் எழுப்பி முக்கிய கேள்வி
'ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; சிபிசிஐடி-க்கு மாற்றுகிறோம்' என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை. பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள். காவல்துறையின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும். வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்" என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் படிக்க | உயிரிழந்த இளைஞர் என்ன தீவிரவாதியா? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
மேலும் படிக்க | சிவகங்கை இளைஞர் மரணம்! முதல்வர் முக ஸ்டாலினுக்கு விஜய் நேரடி கேள்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ